தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha

Deal Score0
Deal Score0

தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha

வெண்பா

தூண்டிலரை போல தொடர்ந்ததெமைப் பல்வினையோ னாண்டவைநின் றேஎமைக்காத் தாதரித்தாய்-ஈண்டுவரை
நாதாஇவ் வாண்டும எங்கள் தாரகம்நீ யேகிறிஸ்து
நாதா பிறஆர் நவில்.

பல்லவி

நீயே துணையேசு நாதா இப்புதுவாண்டும்
நீசர் எமக்கு வேறார் வேண்டும்?

அனுபல்லவி

நேயா சிலுவை மரம் நீண்டதில் மாண்டாய்
ஓயா அழலினின்றே உலகினை மீண்டாய்!-நீயே

சரணங்கள்

1.எய்யம்பு போல யெம் ஆண்டுகள் போயும்
ஏரும் நிழல் நீர்த்தாரைப் போலவை ஆயும்
துய்ய சர்வேச திருச் சேயனே நீயும்
துன்பமின் றெமைக் காத்த சுகம் மகா நேயம்!-நீயே

2.பாழ வகேசியைப் போலே நற்கனியோ
பயனோ கொடாது தரையுங் கெடுத்தினியோ,
ஊழற் கிடப்பான் வாளோங்க வந்தாரே
உடனே பிணை நின்றெமை யோம் பல் செய்தீரே!-நீயே

3.ஆண்களும் பெண்களும் எத்தனை பேரோ
அகிலம் விட்டு மறுமைக் கேகிப் போனாரோ!
நாங்கள் அவரை விட ஞாயமுள்ளோரோ?
நாதா எமில் நீதி எந்நாளும் கண்டீரோ! -நீயே

4.கொற்றவனார்க்குரை கொடுத் தெமை விடுத்தீர்,
குவலயத் திவ்வருஷக் கெடுவையும் கொடுத்தீர்,!
சுற்றிலும் கொற்றி யெருப் பெய்ய வென்றெடுத்தீர்,
குழும் பிணி வறுமை யாவையும் தடுத்தீர்!

5. நோன்மை மலியுமது ரத்தத்தை யூட்டி
நோன்பு பிடித்தால் கோனார் தயை காட்டிப்
பான்மையுடன் பூவிலிவ் வாண்டிலும் நாட்டி
பலபல நன்மை ஈந்தார் பாசம் பாராட்டி

6.ஓகோ அனாதி தரிசுள்ளத்தைப் பேர்த்து,
உடைத்து மூலம் வரையும் உரமது சேர்த்து,
ஏக பராபரனுக் கிசை கனி போர்த்து,
இலங்கும் படி ரட்சியுன் ஆவி நீர் வார்த்து

7.ஆவியின் கனி நிறைந் தடியவர் பிழைக்க
ஆண்ட பரன் மகிமைக் காகவே உழைக்க
மேவும் மிசியோன்கள் மென்மேலுமே தழைக்க
மேதினியோரையு மக்காய் அவை அழைக்க

christians
      Tamil Christians songs book
      Logo