உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics
உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics
உள்ளத்தில் கிறிஸ்து பிறந்து விட்டாரா?
உண்மையான கிறிஸ்மஸ் அதுவே
உன் உள்ளம் மறுரூபம் ஆகிவிட்டதா?
மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் அதுவே
அழகழகாய் அலங்காரம் தொங்குவதில் அல்ல
மின்னலைப்போல் விளக்குகள் மின்னுவதில் அல்ல
பரிசுத்தம் அலங்கரிக்கணுமே – சாட்சியின்
வெளிச்சம் வாழ்வில் வீசச் செய்யணுமே – உள்ளத்தில் கிறிஸ்து
அதிகாலை ஆலயம் செல்லுவதில் அல்ல
Happy Christmas வாழ்த்துக்கள் சொல்லுவதிலல்ல
ஆலயமாய் மாற வேண்டுமே – உன்னில்
தேவ சாயல் தோன்ற வேண்டுமே – உள்ளத்தில் கிறிஸ்து
பளபளக்கும் பட்டாடைகள் எல்லோரையும் ஈர்க்கும்
பாராளும் தேவ கண்கள் உள்ளத்தைத்தான் பார்க்கும்
இரட்சிப்பின் ஆடை வேண்டுமே – உனக்கு
நீதியின் சால்வை வேண்டுமே – உள்ளத்தில் கிறிஸ்து
Ullaththil kiristhu piranthuvittara christmas song lyrics
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும் அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா சமாதான பிரபு எனப்படும் (ஏசா 9: 6)
தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ 3:16)
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் (மத் 1:21)
இந்த வசனங்கள் மூலமாக நாம் அறிந்து கொள்வது என்ன? இயேசு கிறிஸ்து உலக மக்களுக்காக பிறந்தார். இயேசு கிறிஸ்து நமக்காக கொடுக்கப்பட்டார், கடவுள் அவரை நமக்காக தந்தார். கடவுள் அவரை நமக்காக தர வேண்டிய அவசியம் என்ன? காரணம்… நாம் அனைவரும் பாவத்திற்கு அடிமைகளாக்கப்பட்டு இருக்கிறோம். நமது இருதயம் பாவத்தால் தீட்டுப்பட்டு இருக்கிறது.
பாவத்தினால் தீட்டுப்பட்ட மனிதன் பரிசுத்தமான தெய்வத்தின் உறவை இழந்து போனான்.தெய்வத்தின் உறவை அவன் இழந்ததினாலே தேவ சாயலை தன் வாழ்வில் இழந்துபோனான், மனிதன் தேவசாயலை இழந்ததினாலே, வாழ்வின் அர்த்தத்தையும், உண்மையான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும், நிம்மதியையும் இழந்து போனான்.
இப்படிப்பட்ட அவல நிலையில் இருக்கிற மனிதனுடைய பாவத்தை கழுவி அவனை பரிசுத்தவானாய் மாற்றி அவன் இழந்து போன தேவ உறவையும் தேவ சாயலையும் மறுபடியும் அவனுக்குக் கொடுத்து அவனை தேவ பிள்ளையாக மாற்றி அவனுக்கு அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை கொடுப்பதற்காகத்தான் இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார்.
இன்றைக்கு இயேசுவை பின்பற்றுகிற நம்முடைய வாழ்க்கையிலே பாவங்கள் நீங்க கழுவப்பட்டு இருக்கிறோமா? பாவத்திலிருந்து விடுதலை அடைந்து இருக்கிறோமா நமக்காக ஒரு பாலகன் பிறந்தாரே, நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டாரே, கொடுக்கப்பட்ட குமாரனை நான் வாங்கிக் கொண்டு விட்டேனா? அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்று யோ 3:16 வசிக்கிறேன் கடவுள் அவரை தந்தாரே நான் அவரைப் பெற்றுக் கொண்டேனா? அவருடைய பெயருக்கு அர்த்தமே அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று சொல்லப்பட்டு இருக்கிறதே… என்னுடைய பாவங்கள் நீக்கப்பட்டு இருக்கிறதா? கழுவப்பட்டு இருக்கிறதா?
ஒவ்வொரு மனிதனுடைய பாவ விமோசனத்திற்காக தன்னுடைய விலைமதிக்க முடியாத ரத்தத்தை சிலுவையிலே சிந்தி அந்த இரத்தத்தின் மூலமாக மனித குலத்தின் பாவங்கள் கழுவப்படுவதற்கான ஒரு வழியை உண்டாக்குவதற்காவே இயேசு கிறிஸ்து உலகத்திலேயே வந்தார், வாழ்ந்தார், மரித்தார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
வருத்தத்துக்குரிய காரியம் என்னவென்றால்…. இன்று பாவங்கள் கழுவ படாமலேயே கிறிஸ்மஸை கொண்டாடுகிறோம், மறுபடியும் பிறந்து தேவ பிள்ளைகளாய் மாறாமலேயே கிறிஸ்மஸை கொண்டாடுகிறோம். நமக்காய் கொடுக்கப்பட்ட பாலனை…குமாரனை பெற்றுக்கொள்ளாமலே கிறிஸ்மஸ் கொண்டாடுகிறோம். இது உண்மையான கிறிஸ்மஸாக இருக்குமா? வெறுமனே புத்தாடைகளை உடுத்தி கொள்வதும், வீட்டை பலவிதமான விளக்குகளினாலும், தோரணங்களினாலும் அலங்கரிப்பதும், வகை வகையான உணவு வகைகளை சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்து இருப்பது மாத்திரமே உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஆகிவிடுமா? ஒன்று செய்வோம் நம்முடைய பாவ நிலையை ஒத்துக் கொள்வோம், பரிசுத்தமான தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டு மனம் திரும்பி தேவ பிள்ளைகளாக மாறுவோம், அப்பொழுது தேவ பிரசன்னமும் தேவ உறவும் நம்முடைய இருதயத்தை நிரப்பும், அப்பொழுது மிகுந்த சந்தோஷம் நம்முடைய வாழ்க்கையிலே உண்டாகும், நம்முடைய வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று நமக்கு புரியும், நம்முடைய வாழ்க்கை பிறருக்கும் பிரயோஜனமாக மாறும் அப்பொழுது நாம் உண்மையான ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட முடியும்.