பல்லவி
யேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்
நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,
மோசம் போவதேன், மனமே?
சரணங்கள்
1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்
பூதலம் வந்ததார், மனமே?-கொடும்
யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய
போதகம் செய்ததார், மனமே? – யேசு
2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது
சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!
பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் அ
லைந்து திரிவதேன், மனமே? – ஏசு
3. பூதல மீதினில் ஓதரி[1] தாம் பரஞ்
சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்
பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று
வேதமுரைக்கு தல்லோ மனமே? – ஏசு