1.தந்தையே இவர்க்கு மன்னி, தாம் செய்வ தின்னதென்று
சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார் எனக்கிவ்வாதை
எந்தையே எளியேன் பாவம் இரங்கியே பொறுதியென்றே
உந்தையின் வலமே நின்றே உரைத்திடாய் உரிமைநாதா
2.அன்று மெய் மனஸ்தாபத்தோ டடியனை நினையுமென்றே
மன்றாடு சோரன்தேற மலர்த் திருவாய் திறந்தே
இன்றைக் கென்னோடே கூட ஏகமாய்ப் பரதீசின்கண்
சென்று நீ வாழ்வாயென்றீர் தீயனுக்கிரங்காய் நாதா
3.அன்பின் சீடனையே நோக்கி, அதோ உனின் தாய் என்றோதிப்
பின்புநின் தாயை நோக்கி பிள்ளையதோ வென்றோதிக்
குன்றிடா தன்பின் கட்டைக் குவலயத் தமைத்தீரையா
இன்றென தேங்கல் தீர்ப்பாய் இறைவனே உரிமை நாதா
4.என் தேவா, என் தேவா, நீர் ஏனெனைக் கையிகந்தீர்
என்றுமா தொனியாக் கூறி இடர்கொடு துயரமானீர்
என்றுமுனஅ சமூகம் நீங்கி எரிநரகாளா மென்னைப்
பொன்றிடா துயிர்தந் தேற்பாய், பொன்னடிக் கபயம் நாதா
5.உதிர மூற்றுண்டே போக, உஷ்ணமே சட லந்தாவ
நதிகடல் முதிரஞ் செய்தோய் நாவறண்டகமே சோர்ந்து
முதுமறைப்படியே தாக முற்றானானென்றாய் அப்பா
ததியிலென் தாகந்தீர்ப்பாய் தற்பரா உரிமைநாதா
6.திருமறை யடையாளங்கள் தீர்க்கர் முன்னுரைகள் தேவ
நிருணயமெல்லாந் தீர்ந்து நிறைவுனி லடைதல் கண்டு
முருகொளிர் வாய்திறந்தே முடிந்ததெ ன்றுரைத்தீரையோ
இருமையென் பங்கேதாராய் என்னையாள் உரிமை நாதா
7.அப்பனே உமதுகையேன் ஆவி ஒப்படைத்தேனேன்று
செப்பியுள் சிரமே சாய்த்து ஜீவனை விடுத்தீரையா
ஒப்பிலா உரை சொல்லாயா உலகமே புரக்குந் தூயா
அற்பனென் ஆத்மநேயா அருள்தாராய் உரிமைநாதா