கொலைக்காவனம் போறார் – Kolaikavanam Porar

பல்லவி
கொலைக்காவனம் போறார், அன்னமே-நரர்
கொடிய பாவத்தால், இதோ முனன்மே.

அனுபல்லவி
வலமைச் சதா நித்திய,
தலைமைத் தேவா திபத்திய,
வஸ்தனாதி திருச்சேயன்,
உத்தம கிறிஸ்துநாயன்,
மனுடர்களுட பிணையாளி மத்யஸ்தன்,
எனுட் பிரிய மணவாள சிரேஷ்டன்,
வங்கண விங்கித லங்கிர்த நேசன்,
சங்கமுழங்கிய சங்கையின் ராசன்
மருகிய துயரொடு குருசினில் மடியத்
திருவுளமாய் நமதேசுவுங் கொடிய – கொலை

சரணங்கள்

1. பொந்தியுப் பிலாத்துவின் கீழாக – நின்று
புண்ணியனார் பாடுப்பட்டுச் சாக,
பூரியர் ஆரியர் வீரிய மாயடர்
காரிர வேசெய் கொடூரம லாதினம் – கொலை
புடவிக்கிருளே விடியற் பொழுதே
படிறுக்கொடியோர் இடு கட்டுடனே யிரண
போரினா ரவாரமாக மனுடகு
மாரான் மீத கோரமாக முறையிடப், – கொலை

2. சிந்தை நடுங்கச்செய்யும் லோக ஞாயத்
தீர்ப்பின் உபாயமெல்லாம் போக,
புந்திக்கடாத மாயம்,
போடிச் சம்பிரதாயம்,
பொய்மை மனதான நேயம்,
பொற்புப்பேச்சாலென்னாதாயம்,
போதகராகிய காதகர் கூறவும்
யூதர்களாம் வலுபா தகர் சீறவும், – கொலை

3. பூண்ட சொற்படி யாண்ட கர்த்தனை
நீண்ட கற்கிடை மீண்டிறுக்கியே,
பொங்கி மகாவுதி ரங்கள் குபீரென
உங்கசை வாரடி யின்கன வாதைகள்
பொன்னுரு மாறியும் வின்னம தாயிரு
கன்னமெலாம்வலி துன்னவும் நாணொடு
புயங்கள் நொந்திட வொன்றி
அழுந்த வரிந்து பிணைந்துயர்,
போற்றிரு மத்தக முட்கிரீடத்தை
அழுத்தியடித்து முகத்திடை துப்பினர்,
புகைத்து வசை யெண்ணாது பேசினர்,
அகைத்து மனம் நண்ணாமலேசினர்,
பகைத்து நரர் பண்ணாத தீமைகள்
புடைத்தோர் கோலது கொடுத்து, வீணர்கள்
போத நகைத்துச் சிரித்துத்
தீதுற மெத்தப் பழித்து,
பொன்றாத, குன்றாத, நன்றான ஒன்றான,
என்தேவ னின்பால் முழங்கா லிடும்போடு
புதினத்துடனிடவும் விதனப்பட யிறையை
வதனத்தி லறையவும் அதினக் கொடுமைசெய்ய,
பொறை யுடனின்று குருசதுகொண்டு,
யெருசலை யின்கண்ணுருவ நடந்து,
போற்றி மாதர னேக மாயழ
ஆற்றி நேசசி நேக மாகவும்,
பூங்கனியொன் றின்பங்கம்
நீங்கவும் நன்றின் துங்கம்
புகழாகவும் மானிடர் வாழவும்,
மிக வேதயவாகி யென்னா யகர்
புல்லரொடு குருசின் வாதிலறைந்திடக்
கொல்கதா மலையின் மீதிலிறந்திடக் – கொலை

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version