பல்லவி
வா, வா, நேசா மலர் சுவிசேஷத்தின்
மது தனை யுண்டிடவே
அனுபல்லவி
தேவாமிர்தமாம் ஜீவனைக் கண்டிட
சாவாமிர்தமாம் சாமியை அண்டிட
சரணங்கள்
1. ஜீவ போஜனம் ஜீவ நீரதும் தினமும் சுரந்திடுமே
தினமும் பார்த்திட தினமும் கேட்டிட, சிந்தை வருந்திடுமே
பாவ மனைத்தையும் பாடுடனழித்திடும்
ஓவா மகிழ்ச்சியை உளமதிலளித்திடும் – வா வா
2. நானா துலகினில் நலம் பலவடைந்திட நல்லவழி தருமே
நன்மை எடுத்துடன் தின்மை விடுத்திட நல்ல மனம் வருமே
கானாக் கடவுளைக் கண்ணில் காட்டிடும் தோனாத்
துணையதைச் சுபமுடனூட்டிடும் – வா வா
3. கோரக்காப்பிரி, கொல்லும் தீவினர் கொடுமை நீக்கியதே
கோடா கோடியாம் நரரைக் கூட்டி நல்குணம் தாக்கியதே
சோரர்கள் சூதினர் சுத்தராய் மாறினார்
பேரதும் மாறியே பெருமையில் – வா வா
4. இயேசு நாம மதெங்குங் குலாவுமோ இன்பம் அளித்திடுமே
இனிய மறையது இடமே தேடிடில் இதயம் விழித்திடுமே
பேசிடும் பேயெல்லாம் பெயர்ந்திட ஓடிடும்
வீசிடும் ஒளியதை வீறுடன் நீட்டிடும் – வா வா
5. கரும்பைப் புசித்திடக் கையில் கூலியைக் கனிவாய்க் கொடுப்பாருண்டோ?
கண்டிலும் மேலதாய் இனிக்கும் பொருளிதைக் கடிந்து தடுப்பாருண்டோ?
விரும்பியே எடுத்திட வேதமும் வேறில்லை
திரும்பியே அடுத்திட தேவரும் வேறில்லை – வா வா