1.மன்னுயிர்த் தொகுதியீடேற வானினும்
இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை
பன்னியேத் தெடுப்பது பாவ ஜீவருக்கு
இன்னமு தாயதி யேசு நாமமே.
2.தெருளெலாந் தனதெனுந் தெய்வ மாமறைப்
பொருளெலாந் தனதெனப் பொலிந்தி லங்குவது
அருளெலாம் அன்பெலாம் அறனெலாம் வளர்த்து
இருளெலாந் தொலைப்பதி யெசு நாமமே.
3.நித்திய ஜீவனும் நெறியும் போதமும்
சத்திய நிலையமும் தானென்றுள்ளது
பத்தியில் பரவுவோர் பரம வீடுற
இத்தலத் திறத்ததி யேசு நாமமே.
4.நன்னெறி புகுத்திடும் நவையி னீக்கிடும்
இன்னிலை யகற்றிடும் இகல் செகுத்திடும்
உன்னதத் துய்த்திடும் ஒருங்கு காத்திடும்
எந்நலத்தையுந் தரும் யேசு நாமமே.
5.அன்பினுக் குருவநல் லறத்துக் காலயம்
மன்பதைக் கருண்மழை வழங்கு பைம்புயல்
நின்பர மென்றினை வோர்க்கு நித்தியபேர்
இன்பசஞ் சீவிதம் யேசு நாமமே.
6.தருமமும் ஒழுக்கமும் தவமும் ஞானமும்
கருமமும் ஈதலால் கருதில் யாதுமோர்
அருமையும் பயனுமொன்றில்லை யாதலால்
இருமையுந் துணையெனக் கியேசு நாமமே.