ஜெபம் மறவாதே நேசனே
பல்லவி
ஜெபம் மறவாதே நேசனே-எக்காலமும் நீ!
சரணங்கள்
1. ஜெபம் பரமனுடன் பேச்சு;
தேவை யெல்லாம் அத்தா லாச்சு;
தப விசுவாசி மூச்சு;
தகாதெலாம் அத்தால் போச்சு. – ஜெப
2. அம்பரன் கற்பனை நோக்கு;
அவரதருமை வாக்கு;
நம்பிச் சந்தேகம் போக்கு;
நலம் வரத் தீமை நீக்கு. – ஜெப
3. பேயை ஜெபத்தோடு வென்ற,
பிரிய நாமமுங் கொண்ட,
நேய சுதன்தனைத் தந்த,
நின் மலனுக்கே யுகந்த. – ஜெப
4. விசுவாச நேசத்தோடு
மிகும் பக்தியோடு நாடு;
நிச்சயமாய் பரனைத் தேடு;
நேர்மையுடனே ஓடு. – ஜெப
5. பகலுடன் இரவிலும்,
பணிவுடன் குறைவிலும்,
திகிலிலும் மகிழ்விலும்,
செல்வம் வறுமையிலும். – ஜெப
6. தேவ அரசாட்சிக்காக
ஜெபி, உன்றன் குறைபோக,
ஆவலுடன் பிறர்க்காக
அன்புடன் ஜெபிப்பா யாக. – ஜெப