அன்றன்றுள்ள அப்பம்
ஆகஸ்ட் 17 திங்கட்கிழமை 2020
கர்த்தரின் வல்லமை!
“என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக” (எண். 14:18).
நம் ஆண்டவர் வல்லமையுள்ளவர். அவருடைய வல்லமை ஆகாய மண்டலத்தில் விளங்குகிறது. பூமியெங்கும் விளங்குகிறது. இயற்கை முழுவதிலும் விளங்குகிறது. வல்லமையான கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்குத் தம்முடைய வல்லமையைக் கொடுக்க சித்தமானார். வேதம் சொல்லுகிறது, “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9).
தேவபிள்ளைகளே, நீங்கள் வல்லமையும், பெலனுமுள்ளவர்களாய் விளங்க வேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவருடைய வல்லமையை வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார். நீங்கள் வார்த்தையிலும், வல்லமையிலும் பெலனுள்ளவர்களாய் திகழ்ந்தால்தான் உலகத்தைக் கர்த்தருக்கென்று ஆதாயப்படுத்த முடியும்.
ஆனால் அநேகர் கர்த்தருடைய வல்லமையை அறிந்து கொள்ளாதது எத்தனை வேதனையானது! அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையை அறிந்துகொள்ளவில்லை. வேத வசனங்களின் வல்லமையை அறிந்து கொள்ளவில்லை. ஆகவே பெலனற்றவர்களாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு அநேக திருச்சபைகள் தேவனுடைய வல்லமையால் நடத்தப்படாமல் மனுஷனுடைய நிர்வாகத் திறமையினால் நடத்தப்படுகிறது. பள்ளிக்கூடங்களையும், ஆஸ்பத்திரிகளையும் போதகர்கள் நிறுவி, முடிவில் நிர்வாக பிரச்சனைகளினிமித்தம் மனம் சோர்ந்துபோய் வல்லமையை இழந்து தடுமாறுகிறார்கள். ஜாதி பிரச்சனையும், ஊழல்களும் மலிந்து விடுவதினால் சபையில் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் போய்விடுகிறது.
ஆதித்திருச்சபையைப் பாருங்கள். அவர்கள் நிர்வாகத்திற்கென்று செலவழித்த நேரம் குறைவு. முழங்காலில் நின்று பரிசுத்த ஆவியின் வல்லமையை வெளிப்படுத்தியதோ அதிகம். ஆனால் நீங்களோ நிர்வாகப் பொறுப்புகளை அதிகரித்துக்கொண்டு வல்லமையில் குறைவுள்ளவர்களாய் விளங்குகிறீர்கள். இதனால்தான் தேசம் இன்னும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
நீங்கள் கர்த்தருடைய வல்லமையை உங்கள் வாழ்க்கையில் அதிகப்படுத்துங்கள். ஜெபத்தின் வல்லமையை உணர்ந்துகொள்ளுங்கள். ஜெபம்தான் உங்களுடைய பெலவீனங்களை மேற்கொள்ளச் செய்கிறது. தோல்விகளையெல்லாம் ஜெயமாக மாற்றுகிறது. கண்ணீரின் பள்ளத்தாக்கை நீரூற்றாக மாற்றுகிறது. நீங்கள் ஜெபிக்கும்போது கர்த்தர் உங்களை வல்லமையினால் நிரப்புவார். கர்த்தர் சொல்லுகிறார்,”என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3).
இங்கிலாந்து தேசத்தை அசைத்த யோனத்தான் எட்வர்ட்ஸ் என்பவர் மறக்கவே கூடாத வல்லமையான பிரசங்கம் ஒன்றை செய்தார். “எரிச்சலுள்ள தேவனுடைய கைகளில் இருக்கும் பாவிகள்” என்பதுதான் அந்த பிரசங்கத்தின் தலைப்பு. அதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் மனம் திரும்பினார்கள். அந்தப் பிரசங்கத்தின் பின்னணியிலுள்ள சம்பவம் என்ன தெரியுமா? தேவனுடைய ஊழியக்காரரான அவர் மூன்று நாட்கள் இரவும் பகலும் உபவாசமிருந்து தேசத்திற்காகக் கதறி ஜெபித்ததுதான். தேவபிள்ளைகளே, நீங்கள் அவ்வாறே ஜெபிப்பீர்களென்றால், மிகவும் வல்லமையுள்ளவர்களாய் மாற்றப்படுவீர்கள்.
நினைவிற்கு:- “தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே” (நெகே. 1:10).
இன்றைய வேத வாசிப்பு
காலை – சங்கீதம் : 97,98,99
மாலை – ரோமர் : 16
போதகர். ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை