Psalms-147/சங்கீதம்-147

1. கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.

2. கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச்சேர்க்கிறார்.

3. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

4. அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.

5. நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.

6. கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.

7. கர்த்தரைத் துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள்.

8. அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.

9. அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

10. அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்.

11. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

12. எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி.

13. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

14. அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

15. அவர் தமது வார்த்தையைப் பூமியில் அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.

16. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார்.

17. அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார், அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

18. அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய தண்ணீர்கள் ஓடும்.

19. யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.

20. அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.