நீதிமொழிகள்-18/Proverbs-18

1. பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

2. மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

3. துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.

4. மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.

5. வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல;

6. மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

7. மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.

8. கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுபோலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

9. தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.

10. கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

11. ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.

12. அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

13. காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.

14. மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?

15. புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

16. ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.

17. தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான்.

18. சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.

19. அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.

20. அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.

21. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

22. மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

23. தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.

24. சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.