யோபு-30/Job-30

1. இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.

2. விருத்தாப்பியத்தினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.

3. குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,

4. செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுப்பூண்டுகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.

5. அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத் துரத்துகிறதுபோல கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்

6. அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.

7. செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.

8. அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.

9. ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.

10. என்னை அருவருத்து, எனக்குத் தூரமாகி என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள்.

11. நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.

12. வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.

13. என் பாதையைக் கெடுத்து என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை.

14. பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டுவருகிறார்கள்.

15. பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.

16. ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.

17. இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.

18. நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.

19. சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.

20. உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.

21. என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.

22. நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.

23. சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.

24. ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,

25. துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.

26. நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.

27. என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.

28. வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.

29. நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.

30. என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று,

31. என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.