Jeremiah-17/எரேமியா-17

1. யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.

2. உயர்ந்த மேடுகளின் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.

3. வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும் உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன்.

4. அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.

5. மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6. அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.

7. கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

8. அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.

9. எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

10. கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

11. அநியாயாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.

12. எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது.

13. இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

14. கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி.

15. இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள்.

16. நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.

17. நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும், தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.

18. நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.

19. கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,

20. அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

21. நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும்,

22. ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

23. அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.

24. நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,

25. அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

26. யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறமான ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான மலையிலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து ஜனங்கள் சர்வாங்தகனங்களையும் பலிகளையும், போஜனபலிகளையும் தூபவர்க்கங்களையும், ஸ்தோத்திரபலிகளையும் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்,

27. நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.