1. ஆமோசின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
2. கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
3. திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
4. அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
5. யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.
6. யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் நாள் பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர் மேல் பிரியப்படுகிறார்களே.
7. அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.
8. அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும் தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்து கொள்கிறார்கள்.
9. சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.
10. கர்த்தரின் பயங்கரத்துக்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.
11. நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
12. எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,
13. லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின் மேலும்,
14. உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லாமலையின்மேலும்,
15. உயர்ந்த எல்லாக்கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும்,
16. தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.
17. அப்பொழுது நரரின் மேட்டிமைதாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத்தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
18. விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம்.
19. பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
20. பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,
21. மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான்.
22. நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.