1 பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக் கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
2 லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.
3 கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.
4 அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து,
5 அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லையென்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.
6 என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
7 உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை.
8 புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்பு நிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது.
9 இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.
10 ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்பு நிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாகக் கண்டேன்.
11 அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
12 அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.
13 நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
14 அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டில் இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ?
15 அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்.
16 ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.
17 அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின்மேல் ஏற்றி,
18 தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.
19 லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்.
20 யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.
21 இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.
22 யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது.
23 அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
24 அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார்.
25 லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான்.
26 அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?
27 நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.
28 என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய்.
29 உங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு வல்லமையுண்டு; ஆகிலும் உங்கள் தகப்பனுடைய தேவன் நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார்.
30 இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான்.
31 யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.
32 ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.
33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.
34 ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள், லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
35 அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை.
36 அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன?
37 என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்.
38 இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தைகளின் கடாக்களை நான் தின்னவில்லை.
39 பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.
40 பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.
41 இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.
42 என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.
43 அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?
44 இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும் பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.
45 அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.
46 பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள்.
47 லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.
48 இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பெயர் கலயெத் என்னப்பட்டது.
49 அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
50 நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர் பெற்றது.
51 பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.
52 தீங்கு செய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
54 பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.
55 லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.