1. என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
2. எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
3. சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,
4. சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.
5. உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.
6. தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
7. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமதுதோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.
8. தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் இலவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
9. உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.
10. குமாரத்தியே நீ உன் செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
11. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர். ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
12. தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
13. ராஜகுமாரத்தி உள்ளாக பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.
14. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
15. அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.
16. உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.
17. உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.